தோட்டத்திற்கான மண் பராமரிப்பு முறைகளைப்பற்றி பார்க்கும் முன்னர் முதலில் நாம் பின்வரும் மேற்கோளைக் காணலாம்.
“அடிப்படையில் எல்லா உயிர்களும் மண்ணை சார்ந்தே இருக்கின்றது. மண்ணின்றி ஜீவன் இல்லை. ஜீவனின்றி மண்ணும் இல்லை. அவை இரண்டும் ஒன்றாக பரிணமித்து உள்ளன.”
– டாக்டர் சார்லஸ் இ. கெல்லாக்
மண் என்பது தோட்டத்திற்கான ஆன்மா. அதுவே அடித்தளம் ஆகும். மண் தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், கரிமப்பொருட்கள், காற்று மற்றும் நீர் போன்றவைகளின் தேக்கமாகும். இது தாவரங்களின் தோற்ற அமைப்பிற்கு அடித்தளம் நல்கி அதன் வளர்ச்சிக்கு ஊடகமாக செயல்படுகின்றது. உங்கள் தாவரங்கள் செழித்து வளரும்பொழுது மண்ணில் ஏற்படும் மாற்றம் பற்றி அறிவீர்களா? ஆரோக்கியமான மண்ணே நல்ல மகசூலின் பின்னாலுள்ள இரகசியம். மண், தண்ணீரை உறிஞ்சி தாவரங்களுக்கு உணவளிக்கிறது; வேர்களுக்கு நன்கு ஊட்டம் அளிக்கின்றது; மேலும் பயிர்கள் வலுவாகவும், நல்ல மகசூலை அளித்திடவும் உதவுகின்றது
முறையான கவனிப்புடன் ஒவ்வொரு ஆண்டும் மண்னை பாங்கு செய்து, தரத்தை மேம்படுத்தினால், நிரந்தரமாக தாவரங்களை வளர்க்கலாம்.
தோட்டம் அமைத்தல்
தோட்டம் அமைக்க, சூரிய ஒளி நிலத்தில் நன்கு படும்படியான பகுதியை தேர்ந்தெடுக்கவும். அவ்விடத்தில் உள்ள மண்ணின் ஊட்டச்சத்து, PH அளவு, கரிமப் பொருட்கள் போன்றவற்றின் அளவை அறிவதற்கு மண்ணை பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.
“வெறும் மண் மட்டும் அல்ல, மண்ணின் உயிர்த்தன்மையே மிக முக்கியமான கூறு” என்று ஜியோஃப் லாட்டன் கூறியுள்ளார்.
மண் பரிசோதனை, தோட்டத்திற்கு மண்ணை தயார் செய்வதற்கான குறிப்புகளை வழங்குகின்றது. மண் பரிசோதனைக்குப் பின்னரே வேலைகள் ஆரம்பிக்கின்றது. களைகளை கைகளாலோ அல்லது கருவிகளைப் பயன்படுத்தியோ வேறுடன் பிடுங்கி அகற்ற வேண்டும். விதைகளுடன் உள்ள களைகளை அப்புறப்படுத்த வேண்டும். விதைகள் இல்லாத களைகளை தழைக்கூளத்திற்கு பயன்படுத்தலாம். நிலத்தின் அளவைப் பொருத்து கொத்தியோ அல்லது உழுதல் மூலமோ மண்ணை தளர்த்திவிட வேண்டும். பெரிய நிலப் பகுதிகளுக்கு டிராக்டர் அல்லது காளைகளைப் பயன்படுத்தி உழலாம். சிறிய நிலத்திற்கு மண்வெட்டி மற்றும் எளிமையான கருவிகளை பயன்படுத்தி நிலத்தை தயார் செய்யலாம். சுமார் 8 முதல் 10 அங்குலம் வரை மண்ணை உழுது, பெரிய கற்களை அகற்றிடல் வேண்டும். உழுதல் மண்ணை தளர்த்தி, களைகளின் வளர்ச்சியை தடுத்து, பூச்சிகளை நீக்கி, காற்றோட்டத்தை மேம்படுத்துகின்றது. மண்ணை சமன்படுத்தி, நீர்பாய்ச்சி சிறிது காலம் நிலத்தை ஆறப்போடுதல் வேண்டும்.
கரிமப் பொருட்களால் மண் வளத்தை மேம்படுத்துதல்
கரிமப்பொருட்கள் மண் வளத்தை பெருக்குகின்றது. பூமியில் இயற்கையாக கிடைக்கக் கூடிய கரிமப்பொருட்கள், அவை இல்லாத மண்பகுதியினை வளப்படுத்துகின்றது. கரிம பொருட்களுக்கான உதாரணம் – காய்ந்த இலைகள், உடைந்த மரப்பட்டைகள், மரச்சில்லுகள், பழைய மற்றும் மக்கிய குப்பைகள் ஆகும். இது மண்ணின் ஈரத்தன்மையை தக்க வைத்துக் கொள்ளும் திறனை அதிகரித்து, செடிகளின் கட்டமைப்பை ஊக்கப்படுத்தி, செழித்து வளரச்செய்து, தேவையான நுண்ணுயிரிகளையும் பெருக்குகின்றது. உதிர்ந்த இலைகள், காய்ந்த சருகுகள், வைக்கோல், புற்கள் போன்றனவற்றை வேளாண்மை செய்வதற்கு சில காலங்களுக்கு முன் மண்ணில் கலந்து மக்கவிடல் வேண்டும். நைட்ரஜன் நிறைந்த கரிம உரங்களான பண்ணை உரம், மாட்டு சாணம் போன்றவற்றை மண்ணில் சேர்ப்பது சத்துக்களை வழங்கி, மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் திறனையும் அதிகரிக்கும். மக்கிய உரத்தை மண்ணில் சேர்ப்பது நன்று. புதிய பசுஞ் சாணம் போன்றவற்றை சேர்ப்பதனால் வேர்கள் பாதிப்பு, செடிகளுக்கு நோய் தாக்கம் போன்றவை ஏற்படலாம். மக்கவைத்தல் கரிமப் பொருட்களை சிறியதாக உடைத்து மண்ணில் ஊட்டச்சத்துக்கள் எளிதில் கலக்கும் வகையில் செய்து, ஈரப்பதத்தை அதிகரிக்கின்றது. மண்புழு உரம் மிகச்சிறந்த மக்கிய குப்பை உரமாகும். இந்த முறையில் மண்புழுக்கள் வீணான உணவுப் பொருட்கள், இதர குப்பைகள் யாவற்றையும் தாவரங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஊட்டச்சத்துக்களாக மாற்றுகின்றது.
மூடாக்கு பயிர்கள்
மூடாக்கு பயிற்கள் மண் அரிப்பைத் தடுத்து, களைகளை கட்டுப்படுத்தி, மண் வளத்தை மேம்படுத்தி, நோய்களையும் பூச்சிகளையும் விரட்டி, பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துகின்றது. இந்த முறையில் பார்லி, கம்பு, ராகி போன்ற பயிர்களையும் பீன்ஸ் பட்டாணி போன்ற பயிர்களையும் நிலத்தில் பயிரிட்டு மண் வளத்தை பெருக்கலாம். அறுவடைக்காக அல்லாமல் மண்வள மேம்பாட்டிற்காக இப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இது மண்ணில் உள்ள நைட்ரஜன் அளவை மேம்படுத்த செய்கின்றது. உயர்த்தப்பட்ட படுக்கை ரகமின்றி மற்ற இடங்களில் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.
தழைக்கூளம்
இம்முறையில் தழைக்கூளங்களை கொண்டு மண் மூடப்படுகின்றது. இது மண், வளத்தோடு இருப்பதற்கான சிறந்த சூழலை உருவாக்குகின்றது. ஈரப்பதம்,வெப்பநிலை, கரியமிலவாயு செறிவூட்டல் மற்றும் மண்ணின் நுண்ணுயிர் செயல்பாடு ஆகியன இதனால் அதிசயத்தக்க வகையில் அதிகரிக்கின்றது. மக்கிய தழைக்கூளங்கள் தாவரங்கள் வளர சாதகமான சூழலை ஏற்படுத்தி, களைகளை கட்டுப்படுத்தி, மண்ணின் தன்மையும் மிகவும் மிருதுவாக்கி, உரமாகவும், உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகின்றது. வறண்ட இலைகள், காய்ந்த புற்கள், வைக்கோல், தென்னை ஓலைகள் போன்றவைகள் மக்கிய பிறகு கரிம மூடாக்காகப் பயன்படுகின்றது.
தோட்டப் படுக்கை வகைகள்
நிலத்தை பாதைக்குப்போக குறுகிய படுக்கைகளாக பிரித்து அமைக்கலாம். பாதை நடப்பதற்கு போதுமானவையாக அமையவேண்டும். படுக்கைகள் சமப்படுக்கைகள், உயர்த்தப்பட்ட படுக்கைகள், செவ்வகப்படுக்கைகள், வட்டவடிவப்படுக்கைகள் என பலவகைப்படும். நிலத்திற்கும் பயிர்களின் எண்ணிக்கையை அல்லது அளவை பொறுத்தும் படுக்கைகளை அமைப்பதே மிகவும் சிறந்தது. இம்முறையானது சிறந்த மண் அமைப்பை ஏற்படுத்த உதவுகின்றது.
3 முதல் 5 அடி வரை படுக்கைகள் அமைக்கலாம். நீள அளவு எவ்வாறாயினும் நான்கு புறங்களிலும் இருந்து அணுகுவதற்கு, குறுக்குப் பாதை அமைப்பதற்கு ஏற்றவாறு நீளத்தை அமைக்க வேண்டும். படுக்கைகளின் அளவானது நில அளவு மற்றும் பயிரிடக்கூடிய பயிர்களின் அளவைப் பொருத்து அமைத்திடல் வேண்டும்.
சமப்படுக்கை
இது அமைப்பதற்கு எளிமையான சுலபமான படுக்கை ஆகும். காற்று மற்றும் வெயிலின் தாக்கத்திலிருந்து மண்ணைக் காப்பதால் வறன்ட நிலங்களுக்கு இந்த முறை மிகவும் ஏற்றது. இதன் மூலம் ஈரப்பதம் வறண்டு போகாமல் காக்கப்படும்.
உயர்த்தப்பட்ட படுக்கை
இப்படுக்கை சுற்றுப்பாதையை காட்டிலும் சற்று உயரமாக அமைக்கப்படும். இதனால் அதிக மகசூல் கிடைக்கிறது. ஆறு முதல் எட்டு இன்ச் அளவு மண்ணை எடுத்து இந்த உயர்த்தப்பட்ட படுக்கை அமைக்கப்படுகின்றது. இது எட்டு முதல் பத்து இன்ச் வரை ஆழமும் 3 முதல் 4 அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகின்றது. நகரங்களில் உள்ளவர்கள் மரப்பலகை அல்லது செங்கல்கள் அமைத்து நிலையான உயர்த்தப்பட்ட படுக்கையை அமைத்து உபயோகப்படுத்துகிறார்கள்.
தீங்கு விளைவிக்கும் புழுக்கள்
புழுக்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை மண்புழு போன்ற நன்மை செய்யும் புழுக்களும், வெட்டுப்புழு, லார்வாக்கள், மற்றும் வேர் முடிச்சு நூற்புழு போன்று மண்ணுக்கு தீங்கு விளைவிக்கும் புழுக்களும் ஆகும். பொதுவாக வெட்டுப்புழு, லார்வாக்கள், மற்றும் வேர் முடிச்சு நூற்புழு, இம்மூன்று புழுக்களும் மண்ணில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் புழுக்கள் ஆகும். வெட்டுப்புழு அந்துப்பூச்சி இனத்தை சார்ந்தது. வெட்டுப்புழுக்கள் பகலில் மண்ணுக்கு அடியில் தங்கி இரவில் தாவரங்களை உண்கின்றன. தண்டு மற்றும் இலைகளை உண்டு தாவரங்களை அழிக்கின்றன. இவற்றிற்கு உணவாகவும், வாழ்விடமாகவும் இருக்கும் களைகள் மற்றும் தாவர கழிபொருட்களை அகற்றுவதன் மூலம் இப்புழுத்தாக்குதலைத் தடுக்கலாம். ஒவ்வொரு முறையும் மகசூலுக்கு பிறகு மண்ணை சுழற்சி செய்து, சுத்தம் செய்து, பறவைகளை அனுமதிப்பதன் மூலமும் இதனை தடுக்கலாம்.
சூரியகாந்தி மற்றும் ஆமணக்கு போன்ற தாவரங்களை வேளாண்மை ஓரங்களில் நட வேண்டும். இவை புழுக்களை ஈர்த்து, புழுத்தாக்கத்திற்கான அறிகுறிகளைக் காட்டும். பறவைகளுக்கு குளியல் அமைத்து கொடுப்பதன் மூலமும் வேறு வகைகளில் தோட்டங்களுக்கு வரவைப்பதன் மூலமும் புழுக்களை அழிக்க முடியும். வெள்ளை வேர்ப்புழு மண்ணில் வாழும். மண்ணில் உள்ள கரிமப் பொருட்களை உண்டு வேர்களை அளிக்கின்றது. இது பாலிபேகஸ் பூச்சி இனத்தை சார்ந்தது ஆகும். வேப்பெண்ணெயில் நீர் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். மேலும் பறவைகள் இதனை உண்டு வாழும். அதனால் தோட்டங்களில் பறவைகளை வரத்தை அதிகரிப்பதன் முலம் பல நன்மைகளுண்டு. வேர் முடிச்சு நூற்புழு மண்ணைத் துழைத்து வேர்களை உண்டு வாழும் ஒட்டுண்ணி வகையைச் சார்ந்தது ஆகும். பயிர் சுழற்சி மூலமும் மண்ணில் சூரிய ஒளி நன்கு படும்படி செய்வதன் மூலமும் இப்புழுக்களை அழிக்கலாம்.
உட்புற தோட்ட மண் பராமரிப்பு மற்றும் மண்கலவை
உட்புறத் தோட்டங்களுக்கு உண்டான தொட்டிக் கலவையானது பஞ்சுபோன்றதாகவும் மிகவும் இலகுவானதாக இருக்கவேண்டும். இது முறையான வடிகால் வசதியும் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் திறனையும் உள்ளடக்கியதாக இருத்தல் அவசியம். கெட்டியான மண்ணுக்கு ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கிடையாது; அதிக நீரை தேக்கி வைக்க முடியாது. இது அதிக வறட்சியை ஏற்படுத்தும். சிறந்த மண் கலவையானது தோட்டத்திற்கான அடித்தளமாக அமைய வேண்டும். அடிப்படையில், இதற்கு மூன்று பொருட்கள் மிக முக்கியமானதாகும்
தென்னை நார் அல்லது கொக்கோ பிட்
கொக்கோ ஃபீட் என்பது உலர்ந்த மற்றும் சுருக்கப்பட்ட, அதிக நீரை தக்க வைக்கும் திறன் கொண்ட தென்னை நார் ஆகும். இது தண்ணீரை தக்க வைத்து மிகவும் மெதுவாகவும் படிப்படியகாவும் வேர்களுக்கு செலுத்துகின்றது. இதை கையாள்வது மிக எளிதானது. மேலும் இது மண்கலவையின் கணத்தை குறைக்கவும் செய்கின்றது. வழக்கமாகக் கொக்கோபீட் செங்கல் வடிவமாக வருகின்றது. இதனை நீரில் பத்து நிமிடங்கள் (அதாவது 600 கிராம் பிளாக்கிற்கு 3 லிட்டர் அளவு நீர் கலந்து) ஊறவைக்கும் பொழுது இது நீரை உறிஞ்சி தூள் வடிவத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக மாறுகின்றது.
மண்புழு உரம் /மக்கப்பட்ட உரம்/ உரம்
பாரம்பரியமாக, இவை மூன்றும் தாவரங்களுக்கு சத்துக்களை வழங்கி மண்ணை வளப்படுத்தும் உரங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எலும்பு மற்றும் மீன் துகள்களையும் தொட்டிக்கலவையில் ஒரு கைப்பிடி அளவு பயன்படுத்தலாம்.
மண் மற்றும் பெர்லைட்
தோட்ட மண்ணில், கரிமப் பொருட்கள் மற்றும் நுண்ணுயிர்கள் இருப்பதால் ,தாவரங்களுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது. பெர்லைட் இயற்கையாக கிடைக்கும் கனிமம் ஆகும். இது தொட்டிக் கலவையிலுள்ள மண்ணை சீராக்குகின்றது. இதை விருப்பப்பட்டால் பயன்படுத்தலாம்.
நாம் உபயோகிக்கும் தொட்டிகளில் முறையான வடிகால் ஓட்டைகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தொட்டியின் அடியில் சரலைக்கற்களை சேர்க்கவும். அது மண் அரிப்பின்றி, அதிகமாகும் தண்ணீர் மட்டும் கீழே வடிந்து செல்ல உதவுகின்றது. கொக்கோபீட், உரம் மற்றும் மண்ணை 2:2:1 என்கிற விகிதத்தில் கலக்க வேண்டும். பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு கரண்டி வேப்பம் புண்ணாக்கு சேர்க்கலாம். இது எல்லாம் சேர்த்தபின், தொட்டி செடி நடடுவதற்கு தயாராகின்றது. உட்புறம் வைக்கும் செடித்தொட்டிகளுக்கு அடியில் ஒரு தட்டை வைப்பது, உபரி நீரை சேகரித்து இடத்தை சுத்தமாக வைக்க உதவும். மேலும் உட்புறம் வைக்கப்படும் செடிகளுக்கு போதுமான சூரிய ஒளி, வெப்பம் மற்றும் ஈரப்பதம் கிடைக்கக்கூடிய வகையில் இடத்தைத்தேர்வு செய்து தொட்டிகளை வைக்க வேண்டும்.
மாடி தோட்டம்
மாடித் தோட்டத்திற்கான தொட்டிகளுக்கு, மேற்சொல்லப்பட்ட கலவையில் பின்வருமாறு சிறிது மாற்றம் செய்து உபயோகப்படுத்தலாம். தொட்டியில் மூன்றில் ஒரு பாகத்திற்கு கொக்கோபீட் அல்லது கரும்பு சக்கையை சேர்க்கவும். மீதம் உள்ள இரண்டு பாகத்தை கொக்கோபீட், உரம் மற்றும் மண் கலவையால் 2:2:1 என்ற விகிதத்தில் நிரப்ப வேண்டும். தொட்டியின் மேற்பரப்பில் இரண்டு இன்ச் அளவிற்கு காலியாக விடவேண்டும். மேற்பறப்பில் காய்ந்த இலைகளை மூடாக்காக பயன்படுத்தவேண்டும். சூடோமோனாஸ் போன்ற உயிர் உரங்களை பயன்படுத்தலாம்.
தோட்டத்திற்கான மண் கலவையும் தொட்டிகளுக்கான மண் கலவையும்
தோட்டத்திற்கான மண் கரிமப்பொருட்கள் மற்றும் மக்கிய உரக் குப்பைகளால் நிறைந்த இயற்கைவளம் ஆகும். மிகவும் கடினமானதன்மை உடையதாகவும் அதிக நேரம் தண்ணீரை தக்கவைக்க கூடிய திறன் கொண்டதாகவும் இருக்கும். இது தாவரங்களுக்கு முக்கிய ஊட்டச்சத்துக்கள் அளித்து நுண்ணுயிர்களை பெருக்குகின்றது. இது எளிதாக கிடைக்கும், விலை மலிவும் கூட. ஆனால் தொட்டி கலவை என்பது மனிதர்களால் சூத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஒன்றாகும். கட்டிடத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் தொட்டிகளில் செடிகள் நடுவதற்காக இக்கலவை உபயோகப்படுத்தப்படுகின்றது. கொக்கோபீட், மண்புழு உரம், மண் இவையாவும் 2:2:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்டு இக்கலவை தயார் செய்யப்படுகின்றது. இவ்வாறு கலக்கப்படும் கலவையானது தாவரங்களுக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும் ஊடகமாக அமைகின்றது. பெர்லைட் அல்லது வெர்மிகுலைட் உபயோகப்படுத்தியும் இந்த கலவையை தயார் செய்யலாம். சமயங்களில், இதன் விலை அதிகமாக இருக்கும. கள்ளி, காக்டஸ், ஆர்ச்சிட், ரோஜா என்று ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறான கலவைகள் தயார் செய்ய வேண்டும். கிடைக்கக்கூடிய பொருட்களை பொருத்தும், தாவரங்களின் தேவையைப் பொருத்தும் கலவைகளை பல வகைகளில் தயாரிக்கலாம்.
தோட்ட மண் பராமரிப்பில் மணலின் பங்கு
மணலின் தனித்துவம் சிறுசிறு காற்றுப்பைகளை உருவாக்கி நீரோட்டத்தையும் காற்றோட்டத்தையும் அதிகரிப்பதாகும். மணல் மிகவும் கரடுமுரடான துகள்களைக் கொண்டது. தோட்ட மண்ணில் மணலை கலப்பது வரமாகலாம் அல்லது சாபமாகலாம். தோட்ட மண் கடினத்தன்மை கொண்டதாக இருந்தால் அதனுடன் மணல் சேர்க்க பரிந்துரைக்கலாம். அது மண்ணை வளப்படுத்தி தாவரங்களுக்கு நன்மை அளிக்கின்றது. கலக்கப்படும் மணலின் அளவு தாவர வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. சரியான விகிதத்தில் கலக்கப்படும் பொழுது மணல் காற்றோட்டத்தை அதிகப்படுத்தி, வேர்கள் பரவுவதற்கு அதிக இட வசதியை ஏற்படுத்தித் தருகின்றது. மணல் சேர்க்கும்பொழுது மண் தளர்த்தப்பட்டு, தாவரங்கள் வளர்வதற்கு தயாராகின்றது. உதாரணமாக கிழங்கு வகைகள் பயிரிடும் பொழுது தளர்த்தப்பட்ட மண்ணே சிறந்தது. மண்ணில் அதிக மணலை சேர்க்கும் பொழுது மண்ணின் வளத்தை குறைக்கும். மணலை 50:50 என்ற விகிதத்தில் களிமண்ணுடன் சேர்க்கும் பொழுது, களிமண் இலகுவாகின்றது. இதர வகை மண்களுக்கு 25 சதவிகித மணலை கலந்தாலே போதுமானது ஆகும். ஆகவே மணல் என்பது தோட்டப்பராமரிப்பிற்கு மிகத் தேவையான ஒன்றாகும். தோட்டமணல் பராமரிப்பு பற்றி அறிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும்.
தோட்ட மணல் பராமரிப்பு / முடிவுரை
மண் பாதி திடமான பொருட்களையும், மீதம் காற்றும் மற்றும் நீரையும் கொண்டது. இவை மூன்றும் தாவர வாழ்வுக்கு மிக முக்கியமான அங்கமாகும். மகாத்மா காந்தி ” பூமியை உழவும், மண்ணை பராமரிக்கவும் மறப்பது நாம் நம்மையே மறப்பதாகும்” என்று கூறியுள்ளார். பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மண்ணே அடித்தளம். அதை செழிப்பாகவும் வளமாகவும் பராமரிப்பதே பூமியில் உள்ள உயிரினங்களை பேணுவதற்கான திறவுகோல் ஆகும். மண்ணில் உள்ள கரிமப்பொருட்களை தக்கவைத்துக் கொண்டால், நீடித்த வாழ்க்கை உறுதிப்படுத்தப்படுகின்றது. மண் நலன் பராமரிக்கப்படும் பொழுது நமது மற்றும் நமது எதிர்கால சந்ததியினர் நலமும், மேம்படும். இதர பொருட்களுக்கு எங்களது அங்காடியை அனுகவும்.
Leave a Reply