,

தாவரங்களும் மாட்டு சாண உரமும்

Posted by

அந்த காலங்களில் இரசாயன உர விவசாயம் என்பது அபூர்வமான விஷயம் ஆகும். மேலும் விவசாயம் என்றாலே இயற்கை விவசாயமாக அறியப்பட்டது. மாட்டு சாண உரம் கனிம உரங்களின் குறிப்பிடத்தக்க முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும். அதிக மகசூலுக்கு வேண்டி வேளாண்மையில் இரசாயனங்களின் பயன்பாட்டை அதிகரித்ததற்கு பல காரணிகள் உண்டு. விரைவான மக்கள் தொகை அதிகரிப்பு, அதிக மகசூலை நோக்கி விவசாயத்தை செலுத்தியது. இது இயற்கை விவசாயத்திற்கு பதிலாக இரசாயன விவசாய முறைகளை உபயோகப்படுத்துவதற்கு வழிவகுத்தது. விவசாயப் புரட்சியும் இதற்கு  ஒரு காரணியாக செயல்பட்டது. இடைவிடாத இரசாயன விவசாய முறைகள் பல உடல்நலக் கேடுகளை தூண்டி, மண்வளத்தை பாதித்து, சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கும் வழிவகுத்தன. சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள பெரும் சுகாதார விழிப்புணர்வு, மீண்டும் இயற்கை விவசாய முறைகள் புத்துயிர் பெறுவதற்கு வழி வகுத்துள்ளது. கனிம உரங்கள் என்பது  மக்கிய  குப்பைகள், கால்நடைக் கழிவுகள், கோழி எச்சங்கள் மற்றும் வீட்டு குப்பைகளிலிருந்து கிடைக்கப் பெறுகின்றன. (Kaoutar Aboudi & Co in Sustainable Biofuels, 2021). மாட்டு சாண உரம், இயற்கை விவசாயத்தில் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது. இது நூறு சதவிகிதம் இயற்கையானதால்  மண் மற்றும் மனிதர்களுக்கு நன்மை பயக்கும் நிலையான இயற்கை வேளாண்மைக்கு ஒரு திறவுகோலாக செயல்படுகின்றது.

தாவரங்களுக்கு மாட்டு சாண உரத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பசுஞ்சாணம் என்பது அடிப்படையில் மாட்டின் குடல்வழியாக வெளியேறும் செரிக்கப்படாத புற்கள், தானியங்கள் ஆகும்.  அவை மாட்டுச்சாண பட்டை, மாட்டு சாண வரட்டி, மாட்டு சாண எரு என்று அழைக்கப்படுகின்றன. இது தாவர வளர்ச்சிக்கு  தேவையான முக்கிய பெருஞ்சத்துக்கள் மற்றும் நுண்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. சாண உரத்தில் NPK எனப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் மற்றும் பிற சத்துக் கூறுகள் நிரம்பி உள்ளது.  மாட்டு சாண உரத்தில் NPK சதவிகிதம் 3:2:1 ஆகும். இது ‘பிக் 3’ என்று பிரபலமாக அழைக்கப்படுகின்றது. NPK என்பது தாவர வளர்ச்சியை தூண்டவும், அதன் நிறம், உற்பத்தித்திறன், நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றை அதிகரிக்க பயன்படும் முதன்மை ஊட்டச்சத்து ஆகும். மாட்டு சாண உரத்தில் 3:1 என்ற விகிதத்தில் கோசலம் மற்றும் கோமலக் கலவை இருப்பதால், இதில் முக்கியமான லிக்னின் செல்லுலோஸ் மற்றும் ஹெமிசெல்லுலோஸ்கள் உள்ளன. மேலும் இதில் நைட்ரஜன், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் கந்தகம், இரும்பு, மெக்னீஷியம், தாமிரம், கோபால்ட் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்களும் உள்ளன. மாட்டு சாண உரத்தில் அதிக ஈரப்பதம் மற்றும் நைட்ரஜன் இருப்பினும், மாட்டுச்சாண உரத்தின் தரத்தை நிர்ணயம் செய்வதில் விலங்குகளின் வகை, உணவு, இனப்பெருக்க நடைமுறைகள் மற்றும் கழிவு மேலாண்மை மாதிரிகள் முதலியன முக்கிய பங்கு வகிக்கின்றன (Kaoutar Aboudi & Co in Sustainable Biofuels,2021). நாட்டுப்பசுக்களின் சாணம் கலப்பின பசுக்களின் சாணத்தைவிட அதிக அளவு கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் தாமிரம் ஆகியவற்றை கொண்டுள்ளது (Garg and Mudgal 2007; Randhawa and Kuller 2011).

மாட்டு சாண உரம் பற்றிய  ஆராய்ச்சிகள்

சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று, பனை எண்ணெய் தொழிற்சாலைகளில் இருந்து உருவாக்கப்படும் உயிர்பொருளுடன் மாட்டு சாணத்தை கலக்கும் பொழுது, உரத்தின் ஊட்டச்சத்து கலவை மற்றும் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் மேம்படுவதை கண்டுபிடித்துள்ளது.  மேரி மற்றும் அவரது குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் அரிசியில் பாக்டீரியாவை கட்டுப்படுத்த பென்சிலின் மற்றும் ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளைவிட மாட்டு சாணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது கண்டறியப்பட்டது (Gupta, K.K & Co., Current status of cow dung as a bioresource for sustainable development. Bioprocess. 3, 28, 2016). மேலும் சாங் மற்றும் குழுவினர் செய்த ஆய்வில் தேயிலைத் தோட்ட மண்ணில் உள்ள பாக்டீரியாக்களை சாண உரம் சீராக்குகிறது என்பது தெரியவந்துள்ளது (BMC Microbiology 20,190,2020). இவ்வாறாக சாண உரம் பல வழிகளிலும் பயனுள்ளதாக இருக்கின்றது.

சாண எருவினால் தாவரங்களுக்கு ஏற்படும் பயன்கள்

மாட்டு சாணம் மிகச்சிறந்த கரிம உரமாகும். இதில் நிறைந்துள்ள கரிமப்பொருட்கள் காற்றோட்டத்தை மேம்படுத்துவதோடு  கட்டியாக உள்ள மண்ணை தளர்த்துகின்றது. இவற்றை மண்ணோடு சேர்க்கும் பொழுது ஈரப்பதத்தை அதிகரித்து நிலத்தோடு நட்புபாராட்டி மண்ணிற்கு நன்மைபயக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. மேலும் ‘விவசாயிகளின் நண்பன்’ என்று அழைக்கப்படும் மண்புழுக்கள் சாண உரத்தினால் ஈர்க்கப்பட்டு மேற்பரப்புக்கு வருவதினால் மண்ணின் தரம் மேம்படுகின்றது.

மக்கிய மாட்டு சாண உரம் விவசாயத்திற்கு மிகவும் ஏற்றது.  இது வாசமற்றது, நயமானது மற்றும் நுண்துளைகள் உடையதும் ஆகும்.  இதில் உள்ள கரிம பொருட்கள் மண்ணில் உள்ள உயிரினங்களின் வளர்ச்சியை ஊக்குவித்து உயிரோட்டமான மண்வளத்திற்கு வித்திடுகின்றது. இதில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் மண்வளத்தை ஊக்குவித்து தாவர வளர்ச்சிக்கு சிறந்த ஊடகமாக  அமைகின்றது. மண்ணின் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் அம்சங்கள் மக்கிய மாட்டு சாணத்தை சேர்ப்பதன் மூலம் வளம் பெறுகின்றது. மேலும், நொதி  செயல்பாட்டினோடு மண்ணிலுள்ள நன்மை பயக்கும் பன்முக பாக்டீரியாக்களை அதிகரிப்பதன் மூலம் சிறந்த நீர் ஊடுருவலுக்கு உதவி, மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் திறனையும் அதிகரிக்கின்றது. மக்கிய மாட்டு சாண உரத்தை தொடர்ந்து பயன்படுத்துவதால் வண்டல் இழப்பை குறைக்கலாம், மண் அரிப்பையும் தடுக்கலாம்.

மாட்டு சாண உரத்தின் பயன்கள்

இது இரசாயன உரங்களுக்கு மிகச் சிறந்த மாற்றாகும். மண்ணின் இனப்பெருக்கம் மற்றும் மீளுருவாக்க தரத்தை சிறப்பாக கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், உற்பத்தி திறனை நீண்டகாலம் மேம்படுத்துவதோடு, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை நிலையாக அதிகரிக்கச் செய்கின்றது. தாவரங்கள் மற்றும் பயிர்களுக்கு அனைத்து பருவங்களிலும் பயன்படுத்தக்கூடிய உரமாகும். ஊட்டச்சத்து நிறைந்த இந்த உரமானது, மண்ணோடு கலக்கப்படும் போது, தாவரங்களில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுவதோடு அதை உட்கொள்ளும் விலங்குகள் மற்றும் மனிதர்கள் மீதும் நேர்மறையான நல்விளைவுகளை ஏற்படுத்துகின்றது. பசுஞ்சாண உரத்திலிருந்து படிப்படியாக மண்ணில் கலக்கும் சத்தானது, தாவரங்கள் நீண்டகாலத்திற்கு நன்மைகளை அனுபவிக்க உதவுகின்றது.

காலாவதி தேதி இல்லை என்றாலும்  மக்கிய மாட்டு சாண குப்பையை தயாரான ஆறு மாத காலத்திற்குள் பயன்படுத்துவது சிறந்தது. மக்கிய மாட்டு சாண உரக்குப்பையை மூடாக்காக பயன்படுத்துவதின் மூலம் நீர் ஆவியாதலை தடுக்கவும்,  வேர்களை வெப்பத்திலிருந்து காக்கவும் முடியும். இந்தியாவில் மாட்டு சாணம் உரமாக பயன்படுவதோடு மட்டுமல்லாமல், விவசாய இணைப் பொருளாக அதாவது உயிர் உரம், உயிர் பூச்சிக்கொல்லி, மூலிகை பூச்சிவிரட்டி ஆகியன தயாரிக்கவும் பயன்படுகின்றது. பசுமை இல்ல வாயுவை உருவாக்குவதால் சுற்றுச் சூழலுக்கு ஏற்றதாக அமைகின்றது. மேலும் இதில் பாக்டீரியா எதிர்ப்புத்திறன் உள்ளதால் சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. பிரிஸ்டல் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பசுவின் சாணம் மனநிலையை மேம்படுத்தும்  காரணியாக இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.

மக்கிய மாட்டு சாண உரம்

உரிய பொருத்தமான பக்குவத்தில் பயன்படுத்தும் பொழுது மாட்டுச்சாணம் சிறந்த உரமாக பயன்படும். பசுஞ்சாணம் மற்றும் வரட்டிகளைக் காட்டிலும் மக்கிய மாட்டு சாணமே சிறந்த உரமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. பசுஞ்சாணத்தை ஒரு குழியில் கொட்டி, நிழலின் கீழ் காற்றோட்டமாக ஆற விடுவதன் மூலம் மக்கிய பசுஞ்சாண உரம் கிடைக்கின்றது.  வைக்கோலோடு கலந்தும் உரம் தயாரிக்கலாம். இது ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்குள் பயன்படுத்த தயாராகிவிடும்.  சாணத்தை மக்க வைத்து உபயோகிப்பதன் மூலம் தேவையற்ற 

களைகள், அமோனியா வாயு மற்றும் எஸ்ரிச்சியா கோலி போன்ற பாக்டீரியாக்களை தடுக்கவும், தாவரநுகர்விற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உடனடியாக கிடைக்கும்படியும் செய்யலாம். மக்கிய மாட்டு சாண குப்பை உரம் தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் திறன் கொண்டதால் பயிர்களுக்கு அடிக்கடி தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம்  இருக்காது. இதை மண்ணோடு ஒன்றாகக் கலந்தும் அல்லது  மேல் மண்ணோடு சேர்த்தும் பயன்படுத்தலாம்.

பசுஞ்சாணம் பல்வேறு உரங்களின் மூலப்பொருள்

பசுஞ்சாணமானது பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், அமிர்த கரைசல், கனஜீவாமிர்தம் போன்ற கரைசல்கள் தயாரிப்பதற்கும் பயன்படுகின்றது. அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம்.

பஞ்சகவ்யம்

பஞ்சகவ்வியம் முக்கியமாக ஐந்து பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்படுகின்றது. அவையாவன   கோசலம், சாணம், பால், தயிர் மற்றும் நெய். இதனோடு  வெல்லம், வாழைப்பழம் மற்றும் இளநீர் ஆகியவற்றையும்  சேர்க்கலாம்.

சரியான முறையில் தயார் செய்யப்பட்ட கலவையை தாவரங்களுக்கு பயன்படுத்தும் பொழுது அற்புதமான விளைவைக் காணலாம். இது திரவ வடிவமுடையதாதலால் தெளிப்பான்களில் கலந்தோ அல்லது மண்ணில் நேரடியாகவும் பயன்படுத்தலாம். 10 லிட்டர் நீரில் 300 மிலி கலந்து பயன்படுத்தலாம். இது சில இடங்களில் மாறுபடும். விதைத் தேர்வு மற்றும் விதை பாதுகாப்பின் போதும் இதைப் பயன்படுத்தலாம். ஒருமுறை தயாரிக்கப்பட்ட பஞ்சகவ்யத்தை 6 மாதங்களுக்குள் உபயோகிக்க வேண்டும். 

நிலத்தில் உள்ள மண்ணை தயார்படுத்தும் பொழுதும், பூக்கள் பூப்பதற்கு முன்பும், பூ பூக்கும் பொழுதும் மற்றும் காய் பிடிக்கும் பொழுதும் இதனை பயன்படுத்தலாம்.

ஜீவாமிர்தம்

ஜீவாமிர்தம் மாட்டு சாணம், கோசலம், வெல்லம் மற்றும் கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படுகின்றது. இது இரண்டு நாட்களில் தயாராகும். 7 நாட்களுக்குள் உபயோகப்படுத்தப்பட வேண்டும். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு தெளிப்பான் ஆக பயன்படுகின்றது. ஒரு லிட்டர் நீரில் 100 மிலி ஜீவாமிர்தம் கலந்து வேர்களிலும், இலைகளிலும் மாதத்திற்கு இரண்டு முறை தெளிக்கலாம்.

அமிர்த கரைசல்

சாணம், கோசலம் மற்றும் வெள்ளம் கொண்டு அமிர்த கரைசல் தயார் செய்யப்படுகின்றது. இதர திரவ உரங்களைப்போன்று இதையும் இலைகளிலும், வேர்களிலும் ஒரு லிட்டர் நீருக்கு 30 மிலி வீதம் கலந்து, மாதம் இருமுறை பயன்படுத்தலாம்.

மேலே குறிப்பிட்டுள்ளனவற்றுள்ளும் இதர திரவங்களிலும் முக்கிய பங்கு வகிப்பவை கோசலம் மற்றும் கோமலம் ஆகும். இந்த உரமானது செடிகளில் அடர்த்தியான இலைகள் வரவும், ஒளிச்சேர்க்கை நிகழவும், உயிரியல் செயல் திறனை அதிகரிக்கவும், வளர்சிதை மாற்றங்களை உருவாக்கவும் உதவுகின்றது. பக்கத் தளிர்கள் அதிகமான பழங்களை தாங்கும் திறன் பெற உதவும். வேர்கள் அடர்த்தியாகவும் மிகுதியாகவும் நீண்ட காலத்திற்கு புதியதாக இருக்கவும் உதவுகின்றது. மேலும் ஆழமாக வேரூன்றி அதிகபட்ச ஊட்டச்சத்து உட்கொள்ளவும் இது உதவுகின்றது. இந்த திரவங்கள் இலைகள் மற்றும் தண்டுகளை சுற்றி அடுக்கை உருவாக்கி, நீர் ஆவியாவதை குறைக்கின்றது. மாட்டு சாணம் இயற்கை விவசாயத்தில் பிரிக்க முடியாத முக்கிய மூலக்கூறாகும். பசுவின் சாணம் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. உயிர் வாயு அடுப்பு மற்றும் கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்தலாம் (தரையை மெழுகுதல், சுவர் பூசுதல்). மேலும் பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது.

பயன்படுத்தும் வரம்புகள் அல்லது தீமைகள்

தாவரங்களுக்கு பசுஞ்சாண உரத்தை பயன்படுத்துவதில் சில சிக்கல்களும் உண்டு. பசுஞ்சாணம் ஆனது புதிதாக இருக்கும் பொழுது பயன்படுத்தினால்,  அதில் நைட்ரஜன் அதிக அளவில் இருக்கும்.  அது அதிக வெப்பத்தை வெளியிட்டு தாவரங்களின் வேர்களை பாதிக்கும். அதிக அளவில் சாண உரம் பயன்படுத்தினால், பக்க விளைவுகள் உண்டு. தாவரங்களுக்கு அதிக அளவில் நைட்ரஜன் கிடைக்கும் பொழுது, கணிகளை விட அதிக இலைகளை உற்பத்தி செய்ய வாய்ப்பு உண்டு. அதுமட்டுமல்லாது, அதிக உரமானது வேர்களின் மூலமாக ஊடுருவிச் சென்று நிலத்தடி நீரையும் பாதிக்கும் தன்மை கொண்டது. அதனுள் தேவையற்ற களைகள் மற்றும் தீமைகள் விளைவிக்கும் பாக்டீரியாக்களும் இருக்கும். அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை தாவரங்கள் எளிதில் நுகர்வதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அதிகம் வெயிலில் உலர்த்தப்பட்ட சாணமானது அதன் ஊட்டச்சத்துக்களை இழக்கின்றது. புதிய பசுஞ்சாணத்தை நேரடியாக மண்ணில் சேர்க்கும் பொழுது காய்கறிகளின் நிறம், வாசனை மற்றும் சுவையும் பாதிக்கப்படுகின்றது. உதாரணமாக கிழங்கு வகை காய்கறிகளில் புதிய சாணத்தை நேரடியாக சேர்க்கக்கூடாது (எடுத்துக்காட்டு: கேரட்). புதிய பசுஞ்சாணத்தில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களான எஸ்ரிச்சியா கோலி, சல்மோனெல்லா போன்றவை இருக்கலாம். இது தாவரங்களுக்கும் மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கும். அதிக வெப்பநிலையில் உருவாகும் கிருமிகள் வேர் அமைப்புகளை எரித்து, நிலம், நீர், காற்று மற்றும் உணவுக்கு இரண்டாம் நிலை மாசு பாட்டினை ஏற்படுத்துகின்றது. புது பசுஞ்சாணமானது நிலத்தோடு சேர்ந்து மக்குவதற்கு அதிக காலம் பிடிக்கும். அதனுள் நிலத்தினில் பரவக்கூடிய நோய் கூறுகள் மற்றும் களை விதைகள் இருக்கலாம். சாணத்திலிருந்து எழும்பும் நாற்றம் ஈக்கள் மற்றும் புழுக்களை ஈர்க்கும் தன்மை கொண்டது. மேலும் சாணமானது மக்குவதற்கு உடையும் பொழுது அதிக வெப்பத்தை உருவாக்குவதால், அது பயிர்களின் வேர்களை பாதிக்கின்றது. ஆகவே மக்கிய சாணக்குப்பை உரமே தாவரங்களுக்கு சிறந்த பாதுகாப்பான கரிம உரமாகும்.

முடிவுரை

விவசாயத்தில் இரசாயன உரங்களின் பயன்பாடு சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் மனிதர்களுக்கு ஆரோக்கிய கேடுகளையும் உண்டாக்கியுள்ளது. இதற்கு ஒரே தீர்வு இயற்கை விவசாயமாகும். கால்நடை கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் உரமானது பயிர்களை செழிப்பாக விளைவித்து, நமக்கு ஆரோக்கிய வாழ்வினைத் தரும். இரசாயன விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு உடனடியாக மாறும்பொழுது மகசூல் குறைவு ஏற்படலாம். இதை மாட்டு சாண உரம் மற்றும் மாட்டு சாணத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் உரங்கள் மூலம் ஈடு செய்து இலாபகரமான விவசாயம் செய்ய முடியும். உலக வங்கியின் வளர்ச்சி தரவின்படி 2020ல், 65 சதவிகித மக்கள் தொகை கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்தியாவில் மாடுகளின் எண்ணிக்கையானது கடந்த சென்செக்ஸ் இன் படி 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது (டைம்ஸ் ஆஃப் இந்தியா). மகிழ்ச்சியான விவசாயத்திற்கும், ஆரோக்கியமான

தாவரங்களுக்கும், நல்ல விளைச்சலுக்கும் சாண உரமே மிகச் சிறந்த இயற்கை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரம் ஆகும்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *